தேன்கனிக்கோட்டை அருகே போலீசாரை கத்தியால் குத்த முயன்ற 5 பேர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே போலீசாரை கத்தியால் குத்த முயன்ற 5 பேரை கைது செய்தனர்.

Update: 2019-01-26 22:15 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் கேசவன். தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இருவரும் மதகொண்டபள்ளி கிராமத்தில் உள்ள மதுக்கடையில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ரமேஷ், கேசவனிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கினர். இதனால் இருவரும் சத்தம் போட்டனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் இந்த சத்தம் கேட்டு அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசாரை கத்தியால் குத்த முயன்றது. ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கர்நாடக மாநிலம் குனிகல் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (22), முனிராஜ் (48), மைசூரை சேர்ந்த கீர்த்தி (23), குமார் (22), பிரசாத் (21) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்