நாகர்கோவிலில் ஜாக்டோ- ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் உள்பட 6 பேர் கைது நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு

நாகர்கோவிலில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2019-01-26 22:15 GMT
நாகர்கோவில்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

முதல் நாள் ஆர்ப்பாட்டமாக தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் சாலைமறியல் போராட்டமாக மாறியது. சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை புன்னைநகரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் 6 பேரை மட்டும் கைது செய்து விட்டு மற்றவர்களை வழக்கம் போல் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர்.

இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திலேயே அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் விடிய விடிய அதாவது அதிகாலை 2 மணி வரை நடந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

அதன்பிறகு ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதாவது ஆசிரியர்கள் தியாகராஜன், பெனின் தேவகுமார், செந்தில், சுமஹாசன் மற்றும் அரசு ஊழியர்கள் கிறிஸ்டோபர், சந்திரசேகரன் ஆகிய 6 பேரை மட்டும் சிறையில் அடைப்பதற்காக நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி னர். அப்போது 6 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரம்யா, 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது 6 பேரும் ஒரு வாரத்துக்கு தினமும் கோர்ட்டில் வந்து கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்