நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டங்களுக்கு உடனடியாக நிர்வாக அனுமதி அளிக்கப்படும் என்று கே.புதூரில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா கெண்டையனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் வாக்காளர் உறுதிமொழி மற்றும் சுகாதார உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:- இந்த ஊராட்சியில் வெள்ளமண் காட்டில் ரூ.3 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு, செம்மனக்காட்டில் ரூ.3.25 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கிணறு மற்றும் மேடம்பட்டியில் ரூ.6.75 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை அமைத்து குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் கே.புதூர் கிராமத்தை இணைத்து குடிநீர் வழங்க ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அமைத்து அதை பயன்படுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை கிராம மக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களை 1950 என்ற தொலைபேசி எண் மூலம் வாக்காளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்து உரிய விவரங்களை பெறலாம். குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் கல் வரப்பு, மண்வரப்பு, பண்ணை குட்டைகள், தடுப்பணை ஆகியவை கட்டுதல் என குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உடனடியாக நிர்வாக அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜ மனோகரன், தோட்ட கலைதுறை துணை இயக்குனர் அண்ணாமலை, மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி, மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ரவிசந்திரன், தாசில்தார் பிரசன்னமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.