பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மாவட்ட கல்வி அதிகாரி தகவல்

ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-01-26 23:00 GMT

சிவகங்கை, 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலுமுத்து கூறியதாவது:– மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வருகிற 28–ந்தேதிக்குள் பணிக்கு வரவில்லை என்றால், அந்த இடத்தை காலி பணியிடமாக அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த காலி பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த தற்காலிக பணிக்காக மாவட்டத்தில் சுமார் 500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விடுமுறை நாளான நேற்றும் ஏராளமானவர்கள் முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு வந்து பெயர் பதிவு செய்தனர். இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கூட்டமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்