தூத்துக்குடியில் குடியரசு தினவிழா: கலெக்டர் சந்தீப்நந்தூரி தேசியக்கொடி ஏற்றினார் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன

தூத்துக்குடியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2019-01-26 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

குடியரசு தினவிழா

இந்திய நாட்டின் குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப்நந்தூரி காலை 8.05-க்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசார் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நலத்திட்ட உதவி

அதன்பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். சிறப்பாக பணியாற்றிய 43 போலீசாருக்கு சான்றிதழ்களும், 78 பேருக்கு பதக்கங்களும்,

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 264 பேருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 63 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.

கலைநிகழ்ச்சி

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தூத்துக்குடி விகாசா பள்ளி, தண்டுபத்து அனிதா குமரன் மேல்நிலைப்பள்ளி, தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் கேம்ப், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவிகள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி டி.என்.எம்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாலாட்டின்புத்தூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம் பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 795 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைத்து பள்ளிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜிப்சிங் கலோன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்