சென்னையில் இருந்து திருச்சி வந்த பஸ்சில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் ரூ.11½ லட்சம் திருட்டு

சென்னையில் இருந்து திருச்சி வந்த பஸ்சில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் ரூ.11½ லட்சம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-01-26 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் உதவி மேலாளராக பணியாற்றுபவர் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 53). இவர் தலைமையில் துறையூர் அரசு போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் சிவக்குமார் (43), ஊழியர் மணிமுருகன், பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக டெக்னீசியன் ரகுபதி (48), அரியலூர் அரசு போக்குவரத்து கழக டெக்னீசியன் ஆனந்தகுமார் (51) ஆகிய 5 பேர் திருச்சி இனாம்குளத்தூரில் நேற்று தொடங்கிய முஸ்லிம் அமைப்பு ஒன்றின் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு அரசு பஸ்களில் வசூலான கட்டண தொகை ரூ.11½ லட்சத்தை சென்னையில் இருந்து வாங்கி வந்து திருச்சியில் உள்ள அதன் போக்குவரத்துக்கழக பணிமனையில் செலுத்துவதற்காக சென்னை சென்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பணத்தை வாங்கி ஒரு சூட்கேசில் வைத்து கொண்டு செந்தில்குமார் உள்பட 5 பேரும் திருச்சி செல்வதற்காக சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்ற ஒரு அரசு விரைவு பஸ்சில் புறப்பட்டனர். ரூ.11½ லட்சம் இருந்த சூட்கேசை அவர்கள் பஸ்சின் இருக்கைக்கு மேலுள்ள லக்கேஜ் கேரியரில் வைத்துள்ளனர்.

நேற்று காலை 8.20 மணிக்கு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, செந்தில்குமார் உள்பட 3 பேர் பஸ்சை விட்டு இறங்கி டீக்கடைக்கு சென்றதாக தெரிகிறது. மீண்டும் அவர்கள் பஸ்சில் ஏறிய போது, மீதமுள்ள 2 பேரும் பஸ்சை விட்டு இறங்கியுள்ளனர். இந்த நிலையில் லக்கேஜ் கேரியரில் அவர்கள் வைத்திருந்த ரூ.11½ லட்சம் வைக்கப்பட்டு இருந்த சூட்கேசை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக செந்தில்குமார் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். தகவ லறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பஸ்சில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர். ஆனால் சூட்கேஸ் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி சூட்கேசை தேடி வருகின்றனர்.

மேலும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபாயை கையில் எடுத்து வரவேண்டிய அவசியம் என்ன?, சென்னையில் இருந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வங்கி மூலம் பணத்தை செலுத்தியிருக்கலாமே?, இந்த திருட்டு சம்பவத்தில் அதிகாரிகளுக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் செந்தில்குமார் உள்பட 5 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்த ரூ.11½ லட்சம் திருட்டு போன சம்பவம் பயணிகள், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்