நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் உள்பட 31 பேர் கைது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-26 22:00 GMT
நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

காலவரையற்ற போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 22-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் கடந்த 3 நாட்களாக ஜாக்டோ-ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 332 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில்...

கைது செய்யப்பட்டவர்களை நள்ளிரவு விடுதலை செய்தனர். இதில் நெல்லையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பாபுசெல்வன் (வயது 49), ஜான்பாரதி (39), பேராச்சி (37), லோகிதாசன் (55), பால்ராஜ் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 8-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதேபோல் தென்காசியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் (55), ஆசிரியர் வேம்பு (56), கடையநல்லூர் வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் மாடசாமி (52), ஆசிரியர் மணிமாறன் (38), முன்னாள் சத்துணவு அமைப்பாளர் ராமசாமி (60), சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோவில் பிச்சை (51), ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ராஜசேகரன் (52), அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங்கம் (52), உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் பிச்சை கனி (43), மாரியப்பன் ஆகிய 10 பேரை தென்காசி போலீசார் கைது செய்தனர். அவர்கள் செங்கோட்டை மாஜிஸ்திரேட்டு லிங்கம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் தொடக்க கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் இப்ராகிம் (என்ற) மூசா, உயர்மட்ட குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராம், நிர்வாகி முருகராஜ் ஆகிய 5 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி அகிலாதேவி, சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று முன்தினம் சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 690 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தாலும், மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நள்ளிரவில் அவர்களை போலீசார் மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்.

இதற்கிடையே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, ஆசிரியர்கள் குளத்தூர் செல்வகுமார், பூதலாபுரம் பத்மநாபன், சக்கம்மாள்புரம் சுப்புராஜ், புதூர் கலையுடையார், லட்சுமிபுரம் ரமேஷ்குமார், கருப்பூர் ஸ்ரீதர், மாணிக்கராஜ் ஆகிய 7 பேரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு தாவூது அம்மாள் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த 7 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்

இதேபோன்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 331 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

இதற்கிடையே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறாக பேசி மிரட்டியதாகவும் கூறி, ஆசிரியர்கள் மணப்பாடு அருள், நாசரேத் மூக்குப்பீறி பிரின்ஸ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன்சேகர் (அமுதுண்ணாக்குடி), இணை செயலாளர் சேகர் (நடுநாலுமூலைக்கிணறு) ஆகிய 4 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்