பெரியார் பஸ் நிலையம் நாளை மூடல்: 9 இடங்களில் பஸ்களை நிறுத்த போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு

பெரியார் பஸ் நிலையம் நாளை மூடப்படுகிறது. பஸ்களை நிறுத்துவதற்கு 9 மாற்று இடங்களை போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2019-01-26 22:45 GMT

மதுரை, 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் ரூ.156 கோடி செலவில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படுகிறது. அதற்காக பெரியார் பஸ் நிலையம், காம்பளக்ஸ் பஸ் நிலையம் இணைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக பெரியார் பஸ் நிலையம் நாளை (திங்கட்கிழமை) முதல் மூடப்படுகிறது. எனவே மாற்று இடங்களில் பஸ்களை நிறுத்த போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

* திருப்பரங்குன்றம், திருமங்கலம் வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள் கே.பி.எஸ். ஓட்டல் டி.பி.கே. சாலையில் நிறுத்தப்படும்.

* தெப்பக்குளம் திருப்புவனம் செல்லக்கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலை கிரைம் பிராஞ்ச் அருகில் நிறுத்தப்படும்.

* சிந்தாமணி, வேலம்மாள் ஆஸ்பத்திரி, நெடுங்குளம் வழியாக செல்லக்கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலையின் மத்தியில் நிறுத்தப்படும்.

* அவனியாபுரம், காரியாபட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் ஹயாத்கான் தெரு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து புறப்படும்.

* அழகர்கோவில், ஊமச்சிகுளம் வழியாக செல்லக்கூடிய பஸ்கள் கோட்டை மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து புறப்படும்.

* ஒத்தக்கடை, திருவாதவூர், மேலூர் பகுதியில் செல்லக்கூடிய பஸ்கள் பாண்டி பஜார் சர்ச், ரெயில் நிலையம், மேலவெளிவீதி பகுதிகளில் இருந்து புறப்படும்.

* பாத்திமா கல்லூரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மகபூப்பாளையம், மதுரை ரெயில் நிலையம் மேற்கு நுழைவாயிலில் இருந்து கிளம்பும்.

* மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், செக்கானூரணி, உசிலம்பட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் அருகில் இருந்து புறப்படும்.

* மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், அண்ணா மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் இருந்தும், பைபாஸ் ரோடு பகுதிகளில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மேலாண் இயக்குனர் சேனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெரியார் பஸ் நிலையம் மூடப்படுவதால், சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேயர் முத்து பாலத்தில் இருந்து நேரிடையாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் ஏறுவதற்கு, பெரியார் பஸ் நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட இடம் வழியாக சென்று பாலத்தில் ஏற வேண்டும். அதேபோல் மேலவெளி வீதிக்கு செல்வதற்கு பெரியார் பஸ் நிலையத்திற்குள் ஒதுக்கப்பட்ட பாதையில் சென்று, கட்டபொம்மன் சிலையை அடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்