சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்கின்றனர் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்கின்றனர் என கனிமொழி, எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.;

Update: 2019-01-26 22:00 GMT
திருச்செந்தூர், 

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்கின்றனர் என கனிமொழி, எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

திருச்செந்தூர் தேரடி திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சேர்மத்துரை, ரமேஷ், பிரவீன், நிர்மல்சிங் முகிலன், அருண் சாமுவேல், பிரபாகரன் ஆகியோர் முன்னலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தி.மு.க. ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல, தி.மு.க. சாதிகளுக்கு எதிரான கட்சி. திருச்செந்தூர் கோவிலுக்குள் அனைத்து சாதியினரும் செல்ல முடியாத நிலை இருந்தது. அதனை மாற்றியது தி.மு.க.தான். உலகிலேயே மொழிக்கு என்று கடவுள் இருப்பது தமிழ் மொழிக்கு மட்டும்தான். திருச்செந்தூரில் முருக பெருமானின் கோவிலில் திருடுபோன வைரவேலை மீட்கவும், சுப்பிரமணியபிள்ளையின் கொலைக்கு நீதி கேட்டும், கருணாநிதி மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைபயணமாக வந்தார். அவர் நடந்து வந்த மண் என்பதால் எனக்கும் இது புனிததலமாக விளங்குகிறது.

அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசுக்கு காவடி தூக்கி வருகிறது. பா.ஜ.க.வின் ‘பி’ அணியாக அ.தி.மு.க. உள்ளது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பெண்களுக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதனை பா.ஜ.க.வினர் ஏற்க மறுத்து அரசியல் நடத்துகின்றனர். பா.ஜ.க. இனி ஒருபோதும் ஆட்சிக்கு வராது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சாதி, மதங்களால் பிரிவினையை ஏற்படுத்தி அனைவரையும் அழித்து விடுவார்கள்.

சம்ஹாரம்

கோடநாட்டில் நடந்த கொள்ளை முயற்சிக்கும், 5 கொலைகளுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு உள்ளது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதே இந்த திட்டம் நடந்துள்ளது. இதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த கும்பலை வரவழைத்து, சி.சி.டி.வி. கேமராக்களை செயல் இழக்க செய்து, திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். கோடநாட்டில் இருந்த சில அமைச்சர்களின் ஆவணங்களை கைப்பற்றவே இந்த சதி நடந்துள்ளது. பின்னர் அதனை மறைப்பதற்காக 5 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதாவின் சில கொள்கைகள், திட்டங்களுக்கு தி.மு.க. முரண்பட்டாலும், அவரது சாவில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவையே காப்பாற்ற இயலாத அ.தி.மு.க. வினர், எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்?. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் சம்ஹாரம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பூபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுதாகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்