சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் டி.டி.வி. தினகரன் பேட்டி
சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என அ.ம.மு.க.துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.;
திருவண்ணாமலை,
அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு தனியார் விடுதியில் தங்கிய அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புகள் வந்து உள்ளதாக தெரிகிறது. இதை நாம் நம்புவதுயில்லை. இவையனைத்தும் கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள். வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் நான் வெற்றி பெற்றேன்.
‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் போராட்டத்தினை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர சர்வாதிகார போக்கில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்த அரசு இதற்கான பின்பலன்களை அனுபவிக்கும். உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் அ.ம.மு.க.விற்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்காக பேசிக்கொண்டு வருகிறேன். அது முழுமையடைந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பேன். தொண்டர் 95 சதவிகிதம் பேர் அ.ம.மு.க.விடம் உள்ளனர். ஆட்சி அதிகாரம் அங்கு உள்ளதால் சிலர் ஒட்டிக்கொண்டு உள்ளனர். எலும்பு கூடு மட்டும் தான் அ.தி.மு.க.வில் உள்ளது. ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.