பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.

Update: 2019-01-26 22:00 GMT

நாமக்கல்,

குடியரசு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சிபுதூரில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இக்கிராம சபைக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:–

நாமக்கல் மாவட்டம் வறட்சியான மாவட்டம். சமீபத்தில் பெய்த மழை மிககுறைவாக உள்ளது. தற்போது நமக்கு குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்து வந்தாலும், எதிர்காலத்தில் மழை பெய்யாமலோ அல்லது குறைந்த மழையோ கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகிவிடும்.

இதனை போக்குவதற்கு நாம் இப்போதே நீர் சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திட வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். நாம் எந்த அளவிற்கு நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சுகின்றோமோ அந்த அளவிற்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்துகின்ற நீர், கழிவுநீர் வீணாகாமல் அவற்றை மீண்டும் நிலத்திற்குள் செலுத்தும் விதமாக, ஒவ்வொருவரின் இல்லத்திலும் நீர்உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும். அவ்வாறு தொட்டிகள் அமைத்து அவற்றில் நாம் பயன்படுத்துகின்ற நீரை செலுத்தும் பொழுது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வரும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து வாக்காளர் உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவண்ணன், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்