தட்சிண கன்னடா, உடுப்பியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் மந்திரிகள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்

தட்சிண கன்னடா, உடுப்பியில் குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மந்திரிகள் கலந்து கொண்டு விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தனர்.

Update: 2019-01-26 22:30 GMT
மங்களூரு, 

தட்சிண கன்னடா, உடுப்பியில் குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மந்திரிகள் கலந்து கொண்டு விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தனர்.

வரவேற்பு கிடைத்து உள்ளது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கர்நாடக நகர அபிவிருத்தி துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான யு.டி.காதர் கலந்து கொண்டு விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாநில அரசின் ‘படவர பந்து' என்ற திட்டத்தின் மூலம் தெருவோர விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஷீரபாக்ய திட்டத்தின் கீழ் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 1 லட்சத்து 1,579 குழந்தைகள் பயன் அடைகிறார்கள். ஆரோக்கிய கர்நாடக திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 1,902 பேர் பயன் பெறுகிறார்கள்.

தொடர்ந்து நடத்தப்படும்

ஆரோக்ய பாரத் திட்டம் மூலம் 920 பேர் பயன் பெற்று உள்ளனர். வீட்டு வசதித்துறை சார்பில் மாவட்டத்தில் வீடு கட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 135 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதில் 44 ஆயிரத்து 904 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. 612 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 59 ஆயிரத்து 619 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மங்களூரு அருகே கூலூர் பகுதியில் நடந்த ஆற்றங்கரை திருவிழா வெற்றி அடைந்தது. இனி ஆண்டுதோறும் ஆற்றங்கரை திருவிழா ெதாடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

6 பேருக்கு பரிசு

இந்த குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதனை மந்திரி யு.டி.காதர் ரசித்து பார்த்தார். விழாவின் முடிவில் விபத்து இல்லாமல் பஸ்களை ஓட்டிய 6 பேருக்கு மந்திரி யு.டி.காதர் பரிசு வழங்கி கவுரவித்தார். இந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத், ஐவன் டிசோசா எம்.எல்.சி., மேற்கு மண்டல சரக போலீஸ் ஐ.ஜி. அருண் சக்கரவர்த்தி, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுப்பி

இதுபோல உடுப்பி டவுன் பிடினகுட்டே பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் கோலாகலமாக நடந்த குடியரசு தினவிழாவை மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயமாலா கொடியேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாைதயை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உடுப்பி தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி பட், கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்ராவதி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவை சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. கொடியேற்றி தொடங்கி வைத்து பேசினார். மேலும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்