குடியரசு தினவிழாவில் ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் வீரராகவராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ரூ.1 கோடியே 54 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். முன்னதாக விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டரை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
விழாவில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவு செய்த 62 போலீசாருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பதக்கங்களையும், 41 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 90 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளையும் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார். சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ள மாவட்ட சவகர் சிறுவர் மன்றம், தமிழ்நாடு யோகாசன சங்கம் ஆகியவற்றை சார்ந்த 544 மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமலினி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரபிரகாஷ், நடராஜன் ஆகியோருக்கும், இன்ஸ்பெக்டர்கள் ராஜ் குமார் சாமுவேல், லட்சுமி, நாகசாந்தி ஆகியோருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, திபாகர், வினைதீர்த்தான் உள்ளிட்டோருக்கும் போலீசார் அய்யப்ப ராஜா, வளத்தீசுவரன், பட்டாபிராமன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சேக்அப்துல்லா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ்சந்திரபோஸ், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் உள்ளிட்ட 127 அரசு அலுவலர்களின் சேவைகளை பாராட்டி குடியரசு தினவிழாவில் கலெக்டர் வீரராகவராவ் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட வன பாதுகாவலர் அசோக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவ-மாணவிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை குற்றவியல் நீதிபதி சிவப்பிரகாசம், சப்-கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதிகள் இசக்கியப்பன், ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மெய்மொழி, தொண்டி அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல தொண்டி நகர் இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டாணம் விலக்கு சாலையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. நகர் காங்கிரஸ் தலைவர் காத்தராஜா தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் வீரக்குமார், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ராசு, அய்யாக்கண்ணு, அருள்சாமி, கருப்பையா, அழகுமணி, மலையப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆண்டாவூரணி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் மிக்கேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜேம்ஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி இன்ஜினியர் அபூபக்கர் தலைமை தாங்கினார். பொருளாளர் இதயதுல்லா முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த நிர்வாகி அப்துல் கபூர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.