விழாக்கோலம் பூண்டது கன்னியாகுமரி: வெங்கடாசலபதி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் பக்தர்கள் குவிந்தனர்

வெங்கடாசலபதி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் குவிந்துள்ளதால் கன்னியாகுமரி விழாக்கோலம் பூண்டுள்ளது.

Update: 2019-01-26 22:45 GMT

கன்னியாகுமரி,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28–ந் தேதி சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக 5½ ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியது. கடந்த 2013–ம் ஆண்டு கோவில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது ரூ.22½ கோடி செலவில் வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

இங்கு மேல்தளத்தில் மூலஸ்தானத்தில் 7½ அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே கருடாழ்வார் சன்னதியும், மூலவருக்கு வலதுபுறம் பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் ஆண்டாள் சன்னதியும் உள்ளன. மேலும் மூலவருக்கு எதிரே 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் கடந்த 22–ந் தேதி தொடங்கியது. திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் மூலஸ்தான கருவறையில் 7½ அடி உயர வெங்கடாசலபதி சிலையும், கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருடபகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கலசாபிஷேகம் நடந்தது. அப்போது வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடபகவான் ஆகிய சிலைக்களுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து 3 ஆண்டாள் மாலை, பட்டு வேட்டி, பால், எண்ணெய், மஞ்சள்பொடி, தேன், இளநீர் போன்ற பூஜை பொருட்கள் கொண்டு வரப்பட்டன.

நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி பத்மநாபன்போற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகா சாந்தி, திருமஞ்சனம் போன்றவை நடந்தது. அத்துடன், சாமி சிலைகளுக்கு எண்ணெய், பால், தயிர் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடபகவான் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விமான கோபுரத்தில் உள்ள 3 கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தை திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். நிகழ்ச்சியில் ஆகம ஆலோசகர் சுந்தர வரதன் முன்னிலை வகிக்கிறார். மாலையில் 4 மணி முதல் 5.30 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக கோவிலை சுற்றிலும் 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை காண கன்னியாகுமரியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், கன்னியாகுமரியில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பி உள்ளன.

கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நேற்று கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் நேரில் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் பச்சைமாலும் உடன் சென்றார்.

அவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை மைய தலைமை அலுவலக தலைவர் ஸ்ரீகிருஷ்ணன், உறுப்பினர்கள் மோகன்ராவ், ரவிபாபு, சந்திரசேகர் உள்பட பலர் வரவேற்றனர். பின்னர், முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கோவிலை சுற்றி பார்த்தார். கோவிலின் சிறப்புகள் பற்றி கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்