கூடலூரில் நள்ளிரவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 பேர் கைது

கூடலூரில் நள்ளிரவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-26 22:45 GMT
கூடலூர்,

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநிலம் முழுவதும் சாலை மறியல் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கூடலூரில் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரவு 7.30 மணி வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ) நிர்வாகிகள் தவிர மீதமுள்ளவர்களை வீட்டுக்கு செல்லுமாறு போலீசார் கூறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளையும் விடுவித்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்வோம், இல்லையெனில் தொடர்ந்து மண்டபத்திலேயே தங்கி இருப்போம் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திடீரென கூடலூர்-கோழிக்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் உள்பட அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் கூடலூர் பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வீடுகளுக்கு போலீசார் சென்றனர். பின்னர் ஒவ்வொரு வீடுகளின் கதவுகளை தட்டி, அங்கு தூங்கி கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விசாரித்தனர். இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களின் குழந்தைகள் பயத்தில் அழுதனர். இதனிடையே ஜாக்டோ- ஜியோவின் முக்கிய நிர்வாகிகள் இரவோடு, இரவாக தலைமறைவாகினர். இதையடுத்து கூடலூர் பகுதியில் 10 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

நெலாக்கோட்டை அருகே விலங்கூர் பகுதியை சேர்ந்த ஷாஜி(வயது 48), கூடலூர் அதிகாரிவயல் பகுதியை சேர்ந்த கணேசன்(48), தேவர்சோலை மரஹாட்டி பகுதியை சேர்ந்த ராகேஷ் (40), கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியை சேர்ந்த பாண்டியராஜ்(53), கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அருண்குமார்(38), பத்ரசாமி(32), கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்த நஞ்சுண்டன்(42), தேவாலா போக்கர் காலனியை சேர்ந்த விஜயகுமார் (52), நாடுகாணியை சேர்ந்த வசந்தகுமார்(34), தேவாலாவை சேர்ந்த ஸ்ரீவன்சன்(53) ஆகியோர் ஆவர். கைது செய்யப்பட்ட அனைவரையும் கூடலூர் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வன் முன்னிலையில் நேற்று காலை 10 மணிக்கு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்