சாமந்தமலையில் கிராமசபை கூட்டம்: குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை கலெக்டர் தகவல்

சாமந்தமலை கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

Update: 2019-01-26 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளிலும் நேற்று 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. சாமந்தமலை கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிராமப்புறங்களில் பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பருவமழை பொய்த்துள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. எனவே மார்ச், ஏப்ரல், மே உள்ளிட்ட கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், குடிநீருக்கு முன்னுரிமை கொடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பணிகளுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கழிப்பறை இல்லாத வீடுகளில் புதிய கழிப்பறை கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பிரபாகர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலாராணி, கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன் விஜயகுமார் (வேளாண்மை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்