மாணவியை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட முதியவரை கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மாணவியை காதலிக்க வற்புறுத்தியதை தட்டிக்கேட்ட முதியவரை கொன்ற வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;

Update: 2019-01-25 23:33 GMT
சேலம், 

சேலம் டவுன் பெரியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 70). இவருக்கு 15 வயதில் ஒரு பேத்தி உள்ளார். அவள், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2014-ம் ஆண்டு சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த குணா (வயது 28) என்பவர், அந்த மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார்.

அதற்கு மாணவி, தான் தொடர்ந்து படிக்க வேண்டும். நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். ஆனாலும் குணா கேட்காமல் தொடர்ந்து மாணவியிடம் காதலிக்குமாறு கேட்டு வந்தார்.

இதுபற்றி அறிந்த மாணவியின் தாத்தா வெங்கடேசன், வாலிபர் குணாவை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது அவர் இனிமேல் மாணவிக்கு காதல் தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்துவிடுவதாகவும் தெரிவித்தார். இதனிடையே 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி சேலத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை திருமணம் செய்து வைக்குமாறு கூறினார்.

அப்போது வீட்டில் இருந்த வெங்கடேசன் மீண்டும் குணாவை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், முதியவர் வெங்கடேசனை கல்லால் அடித்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த கொலை தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட குணாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன்ராஜ் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்