மலையேற்ற பயிற்சியில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி பலி இன்னொரு மாணவி படுகாயம்

மலையேற்ற பயிற்சியின்போது தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலியானார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட இன்னொரு மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-01-25 23:00 GMT
அம்பர்நாத், 

மலையேற்ற பயிற்சியின்போது தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலியானார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட இன்னொரு மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலையேற்ற பயிற்சி

தானே மாவட்டம் பத்லாப்பூரில் உள்ள கட்ராப் என்ற மலைப்பகுதியில் மலையேற சாரணர் அமைப்பை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அடங்கிய குழு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் அவர்கள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் 10 மணி அளவில் அவர்கள் தங்கள் முகாமிற்கு திரும்பினர். ஆனால், இந்த பயிற்சியில் கலந்துகொண்டிருந்த பூர்வா கங்குருடே(வயது16), அபூர்வா பவார் (16) ஆகிய இரண்டு மாணவிகள் முகாமிற்கு திரும்பி வரவில்லை.

மாணவி பலி

இதனால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் இருவரையும் அங்கு சென்று தேடினர். அப்போது, அங்குள்ள பள்ளத்தாக்கில் மாணவிகள் இருவரும் படுகாயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரும் மலையேற்ற பயிற்சியின் போது, தவறி கீழே விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை மீட்டு பத்லாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூர்வா கங்குருடே பரிதாபமாக உயிரிழந்தார். அபூர்வா பவாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பத்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்