நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் மும்பையில் இன்று முதல் 15 நாட்கள் நடக்கிறது
மும்பையில் நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் இன்று தொடங்கி 15 நாட்கள் நடக்கிறது.
மும்பை,
மும்பையில் நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் இன்று தொடங்கி 15 நாட்கள் நடக்கிறது.
விழிப்புணர்வு பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மும்பையில் நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவை அதிகரிக்க, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் குடியரசு தினமான இன்று (சனிக்கிழமை) தொடங்கி, தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது.
இதில், அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரங்களை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தென்மும்பையில் குறைவு
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
இதுபற்றி மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் கூறுகையில், ‘இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் முக்கிய நோக்கம் மும்பையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்கு தான். தென்மும்பையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஒரு போதும் 50-ல் இருந்து 55 சதவீதத்தை தாண்டியது இல்லை’ என்றார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பஸ் மற்றும் ரெயில்களிலும் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து அறிவிப்புகள் செய்யப்படும், என்றார்.