தற்காலிக பணி கேட்டு முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்கள்
தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று விண்ணப்பங்களை கொடுத்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளதால், மாணவர்களின் கல்விப்பணி பாதிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 10 ஆயிரத்து 930 ஆசிரியர்களில் 6 ஆயிரத்து 544 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் அவர்களிடம் பணிக்கு வராதது ஏன்? என விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசில், உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால் 17(பி) விதிப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால், வருகிற திங்கட்கிழமை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது 17(பி) விதியின் கீழ் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
அதோடு திங்கட்கிழமை பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு உள்ளது. இது பற்றி தகவல் வெளியானதால், வேலையில்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை கொடுத்து விட்டு சென்றனர். இதுதவிர கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடமும் விண்ணப்பங்களை கொடுத்துவிட்டு சென்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் மட்டும் நேற்று பிற்பகல் வரை 150 பேர் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி கூறினார்.
இது பற்றி அவர் கூறுகையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் இருந்து சுற்றறிக்கை வந்து உள்ளது. அதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே தகுதி உள்ள வேலையில்லா இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்திலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் கொடுக்கலாம் என்றார்.