உள்மதிப்பீட்டு தேர்வு நடத்தாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவிகள் முற்றுகை

உள்மதிப்பீட்டு தேர்வு நடத்தாததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலிடெக்னிக் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-25 22:15 GMT
புதுச்சேரி,

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள அரசு சொசைட்டி கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளுக்கு கடந்த 21-ந் தேதி நடத்த இருந்த உள்மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது வரை போராட்டம் நீடிப்பதால் இந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது தெரியவில்லை.

இதனை கண்டித்தும், உடனடியாக தேர்வு நடத்தக்கோரியும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு திரண்டனர். அங்கு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இது பற்றிய தகவல் அறிந்து கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், புதிய பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும், அரசு கல்லூரிக்கு இணையான கல்விக்கட்டணத்தை அரசு சொசைட்டி கல்லூரிகளிலும் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்