வடலூரில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு - 4 பேர் அதிரடி கைது

வடலூரில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-25 23:00 GMT
வடலூர், 

மத்திய புலனாய்வு மதுவிலக்கு பிரிவு திருச்சி மண்டல இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார், திருச்சியில் தஞ்சாவூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூர் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் அந்த காரை துரத்திச்சென்றனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்.

அந்த காரை சோதனை செய்தபோது, அதில் கேன்களில் சாராயமும், புதுச்சேரி மாநிலத்தில் தயார் செய்யப்பட்ட மதுபாட்டில்களும் இருந்தன. உடனே காரையும், அதில் இருந்த சாராயம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட டிரைவரை மத்திய புலனாய்வு மதுவிலக்கு பிரிவுக்கு அழைத்துச்சென்று, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள தென்குத்து அன்னைநகரை சேர்ந்த குபேந்திரன்(வயது 46) என்பதும், வடலூரில் இருந்து கும்பகோணம் வழியாக காரில் திருச்சிக்கு போலி மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

அந்த மதுபாட்டில்களை போலீசார் பார்த்தபோது, அவை புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து குபேந்திரனிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசாரிடம் குபேந்திரன் கூறியதாவது:-

எனக்கு குறுகிய காலத்தில் அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக போலி மதுபான தொழிற்சாலை நடத்த முடிவு செய்தேன். இதற்கு எனது நண்பர்களான புதுச்சேரி மாநிலம் கரசூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சரவணன்(48), கரியமாணிக்கம் புதுகாலனியை சேர்ந்த சிங்காரவேல்(43), உப்பளம் நேதாஜி நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த ராஜ் என்கிற ஆரோக்கியராஜ்(35) ஆகியோரின் உதவியை நாடினேன். அவர்களும் போலி மதுபானம் தயாரிக்க சம்மதம் தெரிவித்தனர்.

இதற்காக குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுக்க முடிவு செய்தோம். ஏனென்றால் குடியிருப்பு மிகுந்த இடத்தில் மதுபானம் தயாரித்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தோம். குறிப்பாக வீட்டின் உரிமையாளர், குடும்பத்துடன் வெளியூரில் இருப்பவர்களின் வீடுகளை தேடிப்பார்த்தோம். நாங்கள் நினைத்தபடியே வடலூர் என்.எல்.சி. நகரில் புது வீடு ஒன்று வாடகைக்கு கிடைத்தது. அந்த வீட்டின் உரிமையாளர், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். எனவே அவர், குடும்பத்துடன் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த வீடு எங்களுக்கு சவுகரியமாக இருந்தது.

இந்த வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். இதற்கு தேவையான மூலப்பொருட்கள், காலி மதுபாட்டில்கள், மூடிகள், எரிசாராயம் உள்ளிட்டவைகளை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்தோம். ஒரு லிட்டர் எரி சாராயத்தில் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் அடைப்போம்.

அதேபோல் போலி மதுபானங்கள் தயாரித்து, அதனை மதுபாட்டில்களில் அடைத்து, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது என்று போலி ஸ்டிக்கர் ஒட்டுவோம். பின்னர் தினமும் நள்ளிரவு நேரத்தில் காரில் வடலூரில் இருந்து பல ஊர்களுக்கு எடுத்துச்சென்று, அந்தந்த பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வோம். கடந்த 9 மாதங்களாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குபேந்திரனை போலீசார், நேற்று வடலூருக்கு அழைத்து வந்தனர். என்.எல்.சி. நகரில் உள்ள அந்த வீட்டை குபேந்திரன் காண்பித்தார். அந்த வீட்டை திறந்து உள்ளே சென்ற போலீசார் வியந்தனர். ஏனெனில் அங்கு, போலி மதுபான தொழிற்சாலையே இயங்கி வந்தது.

அந்த வீட்டில் இருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 சாராய கேன்கள், 500 மில்லி லிட்டர், 200 மில்லி லிட்டர், 750 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபாட்டில்கள், காலி மதுபாட்டில்கள், மூடிகள், போலி ஸ்டிக்கர் அச்சிடும் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கிருந்த குபேந்திரனின் நண்பர்களான சரவணன், சிங்காரவேல், ராஜ் என்கிற ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான குபேந்திரன் உள்பட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடலூரில் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்