கடலூரில் சாலை மறியல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,500 பேர் கைது

கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-25 23:00 GMT
கடலூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக் டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட் டத்திலும் ஈடுபட்டு வருகின் றனர். இவர்களது வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஜாக்டோ -ஜியோ மாநில, மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் இளங்கோவன், மணிவாசகன், அம்பேத்கர், அரிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். இதில் 1500 பெண்கள் உள்பட 2,500 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் வாகனங்களில் போலீசார் ஏற்றிச்சென்று கடலூர் பாரதிசாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

மேலும் செய்திகள்