விருத்தாசலத்தில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவர் திடீர் சாவு - கல்வி சுற்றுலா வந்தபோது பரிதாபம்

விருத்தாசலத்தில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவர் திடீரென இறந்தார். கல்வி சுற்றுலா வந்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-01-25 23:15 GMT
விருத்தாசலம், 

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் திருமுருகன் (வயது 22). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் திருமுருகன் படித்து வந்த கல்லூரி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக மரைன் கல்லூரிக்கு கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து துறைத்தலைவர் எழிலரசு தலைமையில் திருமுருகன் உள்பட 55 மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு நாமக்கல்லில் இருந்து கல்லூரி பஸ்சில் பரங்கிப்பேட்டைக்கு புறப்பட்டனர்.

அந்த பஸ் நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு வந்தபோது திருமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், திருமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருமுருகன் இறந்ததற்கான காரணம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்