உப்பள்ளியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது ரூ.8.41 லட்சம் தங்க நகைகள் மீட்பு

உப்பள்ளியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.8.41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-25 22:15 GMT
உப்பள்ளி, 

உப்பள்ளியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.8.41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

தனிப்படை அமைப்பு

உப்பள்ளி டவுனில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தது. குறிப்பாக ஆளில்லாத வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் நகை-பணத்தை திருடி வந்தனர். இதுதொடர்பாக உப்பள்ளியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில் உப்பள்ளி-தார்வார் மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜ் (தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்) உத்தரவின்பேரில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் உப்பள்ளி டவுனில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர், உப்பள்ளி டவுன் பங்காப்பூர் சவுக் கொல்லர் காலனியை சேர்ந்த கடேப்பா என்பவரின் மகன் ராஜூ (வயது 31) என்பது தெரியவந்தது. இவர் மீது உப்பள்ளியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

கைதான ராஜூ கொடுத்த தகவலின்பேரில் ரூ.8.41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் மீட்டனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருடன் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீஸ் கமிஷனர் பார்வையிட்டார்

இந்த நிலையில் மீட்கப்பட்ட தங்க நகைகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த நகைகளை நேற்று முன்தினம் மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை பிடித்த தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்