நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை பெங்களூரு தெற்கு தொகுதியில் ராமலிங்கரெட்டியை நிறுத்த முடிவு?
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ேதர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ேதர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். பெங்களூரு தெற்கு தொகுதியில் ராமலிங்கரெட்டியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள மத்திய தொகுதி, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும் தற்போது பா.ஜனதா வசம் உள்ளது. அந்த 3 தொகுதிகள் மற்றும் பெங்களூரு புறநகர் தொகுதிக்கான வேட்பாளர்கள் தேர்வு, வெற்றி வியூகம் குறித்து நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
ராமலிங்க ரெட்டியை நிறுத்த முடிவு?
பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகரில் உள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இதற்காக பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாகவும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் ஏற்கனவே அந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி மற்றும் தோல்வி அடைந்தவர்களின் கருத்துகளையும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் கருத்துகளையும் தலைவர்கள் கேட்டு அறிந்துகொண்டனர்.
குறிப்பாக பெங்களூரு தெற்கு தொகுதியில் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.வை நிறுத்துவது மற்றும் பெங்களூரு வடக்கு தொகுதியில் மந்திரி கிருஷ்ணபைரே கவுடாவை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் 4 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக் கொடுக்க தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.