700 காளைகள், 500 மாடுபிடி வீரர்களுடன் கோவையில் 10-ந் தேதி ஜல்லிக்கட்டு
கோவையில் 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்களுடன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் ஆகியவை சார்பில் செட்டிப்பாளையத்தில் எல் அண்டு டி பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கால்கோல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி கோவை செட்டிப்பாளையத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி நடக்கிறது. கோவை இளைஞர்களின் பேராதரவிற்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பு முயற்சியால் கோவையில் ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி நடத்தப்பட்ட அதே மைதானத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் 445 காளைகளும், 323 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அதை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்தனர். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை நடத்த போலீசார், வருவாய்துறை, மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகிறார்கள். போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க காத்திருப்பு இடத்தில் தனியாக மேற்கூரை அமைக்கப்படும். விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்க போதிய அளவிலான இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஹரிகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் கே.அர்ச்சுனன், கஸ்தூரிவாசு, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்குமண்டல போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ்.பி.அன்பரசு, செயலாளர் மாதம்பட்டி தங்கவேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.