நெல்லை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் அண்ணா நகரை சேர்ந்த முருகன் என்பவருடைய மகள் சுடலை வடிவு (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துபட்டன் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துபட்டன் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு முத்துபட்டன் தனது மனைவி சுடலை வடிவை மும்பை அழைத்து சென்றார்.
பொங்கல் பண்டிகைக்காக புதுமண தம்பதிகள் சொந்த ஊரான வெங்கடாசலபுரம் வந்து இருந்தனர். விடுமுறைக்கு பின்னர் நேற்று மும்பை செல்வதாக இருந்தது.
இந்த நிலையில் கணவன் வீட்டில் இருந்த சுடலை வடிவு நேற்று முன்தினம் இரவு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுடலை வடிவு உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை செல்ல விருப்பம் இல்லாமல் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.