அரசு அறிவித்தபடி தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணி தொடக்கம் கலெக்டர் பேட்டி
அரசு அறிவித்தபடி தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் அண்ணா சிலையில் தொடங்கி, கீழராஜவீதி, பிருந்தாவனம் கார்னர் வழியாக சென்று புதுக்கோட்டை டவுன் ஹாலில் நிறைவுபெற்றது. இதில் அரசு மகளிர் கலை கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டவுன்ஹாலில் தேசிய வாக்காளர் தின தின விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் கணேஷ் பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளரும் வாக்களிக்குமாறு, அவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்க வேண்டும், என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கணேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் புதிதாக 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்கள் 12 ஆயிரத்து 796 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். எந்தவித முறைகேடும் இல்லாமல் வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்து உள்ள தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது, என்றார்.
முன்னதாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி வாக்காளர் தின உறுதி மொழியை வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் அதனை திரும்ப கூறி, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.