கோவில்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
கோவில்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-1 மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 16). இவர் கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் மணிகண்டன் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. அன்று இரவில் அவர் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
தற்கொலை
இதையடுத்து நேற்று காலையில் மணிகண்டனை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
தற்கொலை செய்த மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணிகண்டன் பல் வலியால் அவதி அடைந்ததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.