பெரம்பலூர் அருகே திருநங்கைக்கு கத்திக்குத்து மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர் அருகே திருநங்கையை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாடாலூர்,
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் ஏரி அருகே நேற்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரத்த காயங்களுடன் கிடந்தார். அந்த வழியாக அதிகாலையில் வயல் வேலைக்கு சென்ற விவசாயிகள் அதை பார்த்து 108 ஆம்புலன்சுக்கும், பாடாலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த திருநங்கை என்பது தெரிந்தது. பின்னர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பந்தப்பட்ட திருநங்கை நேற்று முன்தினம் இரவு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழயாக சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தியுள்ளார். அந்த காரில் 2 ஆண்கள் இருந்துள்ளனர். காரில் இருந்தவர்கள் பெண் போல் தோற்றம் உடைய அந்த திருநங்கையை காரில் ஏற்றிச்சென்று மறைவான இடத்தில் உல்லாசம் அனுபவிக்கலாம் என்ற ஆசையில் அவரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கார் பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் ஏரி அருகே சென்றபோது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, உல்லாசம் அனுபவிக்க திருநங்கையை ஏரி பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த பெண் திருநங்கை என்பதை அறிந்த அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
மேலும் ஏமாற்றம் அடைந்த அந்த 2 நபர்களும் திருநங்கையை தாக்கி ஆடைகளை கிழித்தனர். மேலும் கத்தியால் கை, கால்களில் குத்திவிட்டு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். காயம் அடைந்த அந்த திருநங்கை சாலையின் அருகே வந்து மயக்கம் அடைந்து கிடந்தார் என்பது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி திருநங்கையை கத்தியால் குத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.