வேலை நிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டத்தில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் நீடித்தது. நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,173 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-25 22:30 GMT
விழுப்புரம், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நேற்றும் 4-வது நாளாக நீடித்தது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 ஆயிரத்து 121 பேரும், ஆசிரியர்கள் 9 ஆயிரத்து 672 பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஒரு சில அலுவலகங்களில் ஒன்றிரண்டு ஊழியர்களே பணிக்கு வந்திருந்ததால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இவர்களின் போராட்டத்தினால் பல்வேறு கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளபோதிலும் இன்னும் பெரும்பாலான ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை.

இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. அதிலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஒன்றிரண்டு ஆசிரியரை கொண்டு பெயரளவில் இயங்கியது.

இதனால் மாணவ- மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவ- மாணவிகள் தாங்களாகவே பாடம் நடத்தி படித்ததை காண முடிந்தது.

மேலும் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே காலை 11.45 மணியளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 759 பெண்கள் உள்பட 1,262 பேரை கைது செய்து போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சியிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 387 பெண்கள் உள்பட 911 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆக விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 1,146 பெண்கள் உள்பட 2,173 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தி.மு.க. சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

மேலும் செய்திகள்