கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மேல் முறையீடு செய்வேன்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மேல்முறையீடு செய்ய போவதாக டிராபிக் ராமசாமி கூறினார்.

Update: 2019-01-25 23:30 GMT
கோத்தகிரி,

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அங்குள்ள போலீசாரிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்ததாக தெரிகிறது. இதையடுத்து டிராபிக் ராமசாமி அங்கிருந்து கோடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார்.

பின்னர் கொலை, கொள்ளை நடந்த இடங்களை பார்வையிட வேண்டும் என்று கூறி அங்குள்ள 8-வது நுழைவு வாயில் வழியாக எஸ்டேட்டுக்குள் நுழைய முயன்றார். ஆனால் அவரை உள்ளே செல்ல விடாமல், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது மேற்பார்வையாளர் அண்ணாதுரை என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதன்பிறகு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக நான் தாக்கல் செய்த மனுவை, மீண்டும் மறுசீராய்வு செய்ய எனது வக்கீலை கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தை அணுக உள்ளேன். கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடங்களை பார்வையிடவே, கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2 ஆண்டுகள் இங்கிருந்தே அரசு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் எதையோ மூடி மறைக் கிறது. நான் இங்கு வந்தபோது, ஊழியர்களை வைத்து என்னை மிரட்டினார்கள். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுப்பேன்.

சென்னைக்கு சென்றவுடன் எனது வக்கீலை சந்தித்து, இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளேன். இந்த வழக்கில் யார் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த எஸ்டேட் சொத்து யாருடையது, இது எங்கிருந்து அவர்களுக்கு வந்தது என்ற தகவல்களை திரட்ட போகிறேன். ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதை வருமான வரித்துறை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் நான் நினைவு மண்டபம் கட்டுவதை தடுக்ககோரி வழக்கு தொடருவேன். ஒரு பொறுப்புள்ள முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து இருந்தால், கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கியது தி.மு.க. வினர் என்று பேசியிருக்க மாட்டார். ஒரு முதல்-அமைச்சர் பேச வேண்டிய பேச்சு இது அல்ல. ஒருவருக்கு யார் வேண்டுமானாலும் ஜாமீன் வழங்க கையெழுத்திடலாம். தமிழகத்தில் இந்த ஆட்சி கலைக்கப்படும். அதற்கான முடிவு விரைவில் வரும்.

அடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளுமே காணாமல் போய்விடும். ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். கோடநாடு எஸ்டேட்டை அரசே எடுத்துக்கொள்ளும் நிலைக்கு நான் கொண்டு செல்வேன். அரசுக்கு எதிராக தான் நான் இங்கு வந்துள்ளேன். அரசு குற்றவாளிகளுக்கு துணை போகிறது. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி தான். அவரது பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்டு வருகின்றனர். விளம்பரத்தில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை எதிர்த்து நான் தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அதற்கு உயிருள்ளவரை போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்