கிருஷ்ணகிரி நகரில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி சீட்டு விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி நகரில் லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2019-01-25 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் லாட்டரி சீட்டு விற்பனை இருந்தது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் பரிசு என்று அதிக பரிசுத்தொகை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. இந்த லாட்டரி சீட்டால் பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக வந்த புகாரால், மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவரது ஆட்சிக்காலத்தில் லாட்டரி சீட்டிற்கு தடை விதித்தார்.

அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் லாட்டரி சீட்டிற்கான தடை தொடர்ந்தது. தற்போது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் லாட்டரி சீட்டிற்கு தடை உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி நகரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் பர்கூர், ஒரப்பம் பஸ்கள் நின்று செல்லக்கூடிய இடத்தின் அருகில் உள்ள சந்தில் உள்ள கடைகளிலும், பூங்காவனம் தெருவில் உள்ள கடைகளிலும், பழைய பேட்டையில் பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கேரள மாநில லாட்டரி சீட்டுகளின் எண்கள் ரூ.30, 40, 70 என்ற சீட்டிற்கு ஏற்றவாறு ஒரு அட்டையில் எழுதி கொடுக்கப்படுகிறது. ஆன்லைனில் முடிவுகள் வந்த பிறகு அந்த எண்ணிற்கோ அதில் கடைசியாக உள்ள 3 எண்களோ வந்திருந்தால் அந்த எண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.

அவ்வாறு கிருஷ்ணகிரி நகரில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளிகள், பொதுமக்கள் இந்த லாட்டரி சீட்டை மறைமுகமாக வாங்குகிறார்கள். இதன் மூலம் நாள்தோறும் கிருஷ்ணகிரி நகரில் லட்சக்கணக்கான தொகையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றன. இதனால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. அன்றாடம் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் சம்பள பணத்தில் லாட்டரி சீட்டுக்கள் வாங்குவதை மோகமாக கொண்டு பலரும் செயல்படுகிறார்கள். இந்த விற்பனையை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்