செஞ்சி அருகே பயங்கரம் பெண்ணை கொன்று மலையடிவாரத்தில் பிணம் வீச்சு

செஞ்சி அருகே பெண்ணை கொன்று மலையடிவாரத்தில் பிணத்தை வீசிச்சென்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-01-25 22:30 GMT
செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருக்கு குட்டியம்மாள்(வயது 43) என்ற மனைவியும், கார்த்திக்(28) என்ற மகனும் உள்ளனர். கடந்த 18-ந்தேதி காலை ஆடுகள் மேய்க்க அதேஊரில் உள்ள மலையடிவாரத்துக்கு சென்ற குட்டியம்மாள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாயமான அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கார்த்திக் ஆடு மேய்ப்பதற்காக அதே ஊரில் உள்ள மலையடிவாரத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள முட்புதரில் குட்டியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் கதறி அழுததோடு, இதுபற்றி செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வீமராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டியம்மாளின் உடலை பார்வையிட்ட னர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் குட்டியம்மாள் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தியபோது, குட்டியம்மாளுக்கும், அதேஊரை சேர்ந்த உறவினரான ராஜாமணி மகன் தேவேந்திரன்(25) என்ற கூலி தொழிலாளிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து செஞ்சி அருகே உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த தேவேந்திரனை பிடித்து விசாரணை நடத்தியபோது, குட்டியம்மாளை அடித்து கொலை செய்து பிணத்தை மலையடிவாரத்தில் வீசிச் சென்றதை போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். மேலும் அவர் போலீசாரிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும் குட்டியம்மமாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த எனது மனைவி என்னிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மாலை குட்டியம்மாளிடம் உல்லாசம் அனுபவிக்க மலையவடிவாரத்துக்கு சென்றேன். அப்போது குட்டியம்மாளுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த நான் குட்டியம்மாளை தாக்கினேன். இதில் அவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு வெளியூர் சென்று தலைமறைவாக இருந்தேன் என்று கூறினார். இதையடுத்து போலீசார் தேவேந்திரனை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்