திருமங்கலத்தில் கோர்ட்டு கட்டப்படும் இடத்தில் நீதிபதிகள் ஆய்வு
திருமங்கலத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட நீதிபதிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் என 4 நீதிமன்றங்கள் தனித்தனியாக உள்ளன. இதனை ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கட்ட வேண்டும் என்று வக்கீல் சங்க தலைவர் ராமசாமி மற்றும் வக்கீல்கள் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் அதனை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கையாக முன்வைத்தனர். பொதுமக்களும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து கோரிக்கைகளை ஏற்று அமைச்சர் கப்பலூரில் டாப்கோ கோழிப்பண்ணையாக இருந்த இடத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்ட நடவடிக்கை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம், கப்பலூரில் காமராஜர் உறுப்பு கல்லூரி அருகே உள்ளது.
இந்தநிலையில் கோர்ட்டு கட்டப்படவுள்ள இடத்தில் மாவட்ட நீதிபதிகள் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு, மாவட்ட குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி, மாவட்ட சார்பு நீதிபதி முத்துகுமரன், திருமங்கலம் உரிமையியல் நீதிபதி ஸ்ரீவித்யா, கூடுதல் மாவட்ட நீதிபதி பர்சத்பேகம், வக்கீல் சங்க தலைவர் ராமசாமி உள்பட வக்கீல்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தினை ஆய்வு செய்த நீதிபதிகள், இடம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.