அவினாசி துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து - 13 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
அவினாசி துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 13 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவினாசி,
அவினாசி-கோவை மெயின்ரோட்டில் கந்தம்பாளையம் பிரிவு அருகே துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு திடீரென்று புகை வந்துள்ளது. புகை வந்த சில நிமிடங்களில் அந்த மின்மாற்றி பயங்கரமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
உடனே அங்கிருந்த ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதற்கிடையில் தீ மளமள வென்று மற்றொரு மின்மாற்றிக்கும் பரவியது. இதனால் அந்த மின்மாற்றியும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் மின்மாற்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேனுக்கும் தீ பரவியது. இது குறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சிவக்குமார், சீனிவாசன், பார்த்தீபன் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அதன்பின்னர் முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 2 மின்மாற்றிகள் எரிந்து சேதமானது. ஒரு வேனும் சேதமடைந்தது.
இதனால் அவினாசி, வடக்கு, கிழக்கு ரதவீதி, சேவூர்ரோடு, சக்திநகர், குமரன்காலனி, அவினாசிலிங்கம்பாளையம் ரோடு, எஸ்டி அப்பரஸ் பகுதி, மற்றும் வேலாயுதம்பாளையம், ராக்கியாபாளையம் உள்பட 13 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிகள் முடங்கின. மின்மாற்றி திடீரென்று தீப்பிடித்து எரிய என்ன காரணம்? என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மண்டல தலைமை பொறியாளர் மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அவினாசி துணை மின்நிலையத்தில் மொத்தம் 12 மின்மாற்றிகள் உள்ளன. அதில் மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மின்மாற்றி திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இந்த தீ மற்றொரு மின்மாற்றிக்கும் பரவிய நிலையில் விரைந்து அணைக் கப்பட்டு விட்டது. இவற்றின் சேதம் ரூ.10 லட்சமாகும்.
இந்த தீ விபத்தில் மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு வடுகபாளையம், தெக்கலூர், வேலம்பாளையம், வஞ்சிப்பாளையம், கருவலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் மின்பழுதை முற்றிலும் இன்று (நேற்று) இரவுக்குள் சீரமைத்து விடுவோம். அதன்பின்னர் சீரான மின்வினியோகம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்மாற்றிகள் தீப்பிடித்து எரிந்ததால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.