விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் உரிமையாளர் சாவு
விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 54). இவர் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டல் வியாபாரத்திற்காக, அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு முட்டை வாங்க சென்றார். பின்னர் முட்டைகளை வாங்கிக்கொண்டு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு மார்க்கமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர், முத்துகிருஷ்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.