நாளை குடியரசு தின விழா ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
குடியரசு தினவிழா நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கடலூர் முதுநகர்,
நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ஏட்டுகள் கோமதி, ராம்குமார், ராமமுர்த்தி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர். மேலும் தண்டவாள பகுதியிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களிலும் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை நாளை வரை நீடிக்கும் என போலீசார் ஒருவர் தெரிவித்தார்.