உப்பளம் மைதானத்தில் நாளை விழா: குடியரசு தின இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை
உப்பளம் மைதானத்தில் நாளை நடைபெறும் குடியரசு தினவிழா வினையொட்டி போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.;
புதுச்சேரி,
குடியரசு தின விழா புதுச்சேரியில் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக புதுவை உப்பளம் மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாளை காலை 8.30 மணிக்கு கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இந்த விழாவின்போது பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக கடந்த சில நாட்களாக போலீசார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உப்பளம் மைதானத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரிநந்தா தலைமையில் நேற்று போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு டி.ஜி.பி. பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக குடியரசு தினவிழா ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதேபோல் உப்பளம் மைதானத்தில் குடியரசு தினவிழா முடிந்ததும் சட்டமன்ற வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றுவார். அங்கும் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.
குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி புதுவை கவர்னர் மாளிகை, சட்டசபை ஆகிய கட்டிடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.