புதுக்கோட்டையில் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,450 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2 ஆயிரத்து 450 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-01-24 23:00 GMT
புதுக்கோட்டை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடி வினையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல பல பள்ளிகள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள புதுக்கோட்டை-மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி, புகழேந்தி, செல்வராஜ், ராஜாங்கம், கண்ணன், செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில நிர்வாகிகள் ஹேமலதா, மணிகண்டன், மதலைமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 500 பெண்கள் உள்பட 2 ஆயிரத்து 450 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றி புதுக்கோட்டையில் உள்ள 7 மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்