வேலூர் உழவர் சந்தையில் செல்போன் திருடிய வடமாநில வாலிபர் கைது சிறுவனும் சிக்கினான்

வேலூர் உழவர் சந்தையில் காய்கறி வாங்கி கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த ஒரு சிறுவனும் சிக்கினான்.

Update: 2019-01-24 22:00 GMT
வேலூர், 

வேலூர் டோல்கேட்டில் உள்ள உழவர் சந்தையில் வேலூரை சேர்ந்த பொதுமக்கள் காய்கறி வாங்கிச் செல்வது வழக்கம். நேற்றும் காலையில் பொதுமக்கள் பலர் வந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மற்றும் சிறுவன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் காய்கறிகளை வாங்கி கொண்டிருந்த வேலூர் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 51) என்பவரிடம் செல்போன் திருடினர். இதைப்பார்த்த சீனிவாசன், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதனால் அந்த வாலிபரும், சிறுவனும் தப்பி ஓடினர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது. சிறுவனையும் பொதுமக்கள் அடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் கிராம்சடபங்கா பகுதியை சேர்ந்த நிமோஜான்தாகூர் என்பவரின் மகன் லட்சுமணன்தாகூர் (23) என்பதும், அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 10 வயதுடையவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. லட்சுமணன் தாகூரை போலீசார் கைது செய்தனர். சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் வேலூரில் எங்கு தங்கினர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து சீனிவாசனின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்கள் கூறுகையில், சமீப காலமாக வேலூரில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விளையாட்டு சாதன பொருட்கள், போர்வை, பானிபூரி, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை வீடு, வீடாக சென்று விற்பனை செய்கின்றனர். வேலூரில் உள்ள பல்வேறு கடைகளில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், தங்கும் விடுதியில் அறை எடுத்தும் தங்கி பணி செய்கின்றனர். சிலர் பகலில் வியாபாரியாகவும், இரவில் திருட்டு சம்பவத்திலும் ஈடுபடுகின்றனர். போலீசார் அவர்களை கண்காணிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தங்களிடம் வேலைபார்க்கும் வட மாநிலத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்