கச்சத்தீவு ஆலய விழாவுக்கு 65 விசைப்படகுகளில் செல்ல ஏற்பாடு
இந்திய-இலங்கை மக்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு 65 விசைப்படகுகளில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்,
இயற்கை எழில் கொஞ்சும் கச்சத்தீவு 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இங்கு கிடைக்கும் தண்ணீர் கச்சத்தன்மை உடையதாக இருப்பதால் கச்சத்தீவு என்று பெயர் பெற்றது. பசுமை சூழ்ந்து காணப்படுவதால் பச்சைத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் என்பவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த இயற்கை இடர்பாட்டில் இருந்து காப்பாற்றும்படி புனித அந்தோணியாரை வேண்டினாராம். அப்போது அவர் கடல் கொந்தளிப்பில் இருந்து மீண்டு காப்பாற்றப்பட்டார்.
அதன் நினைவாக கச்சத்தீவில் கீற்றுக் கொட்டகையால் ஆன சிறு ஆலயத்தை கட்டி புனித அந்தோணியாரின் உருவத்தை சீனிக்குப்பன் நிறுவினார். அதன்பின் ஓடுகளால் கூரை வேயப்பட்ட கட்டிடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டதாக ஆலய வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்திய-இலங்கை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் விழா நடைபெற்று வருகிறது.
கச்சத்தீவில் பல ஆண்டுகளாக ஓட்டு கொட்டகையாக காட்சியளித்து வந்த அந்தோணியார் ஆலயம் இலங்கை அரசால் புனரமைக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஆலயமாக கட்டப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அந்தோணியார் ஆலய திருவிழா அழைப்பிதழ் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மூலம் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதியன்று மாலை 4 மணி அளவில் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் இருநாட்டு பங்கு தந்தைகளும் சேர்ந்து, அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை ஏற்ற திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவைப் பாதை திருப்பலி, இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு, தேரை சுமந்தபடி இருநாட்டு மக்களும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் 2-வது நாள் காலை 7 மணி அளவில் திருவிழா சிறப்பு திருப்பலி யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு திருப்பலியில் இந்திய- இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள். காலை 10 மணியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
இருநாட்டு மக்களின் உறவுக்கு எடுத்துக்காட்டாக நடைபெறும் இந்த விழா குறித்து, ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் கூறியதாவது:-
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழா குறித்த அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து, அரசிடம் அனுமதி பெற்று தேவையான ஏற்பாடுகள் செய்து தரும் படி கேட்டுள்ளோம். அதற்கு மாவட்ட கலெக்டரும் திருவிழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்த ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து 65 விசைப்படகுகளில், தலா ஒரு படகில் 35 பேர் வீதம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு செல்ல விரும்புபவர்கள் வருகிற வருகிற 1-ந்தேதி முதல் 5-ந் தேதிக்குள் படகு உரிமை யாளர்களிடமே விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருவிழாவுக்கு செல்ல விரும்புபவர்கள் அரசின் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்கள் அந்தந்த துறை அதிகாரிகளிடமும், அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த காவல் நிலையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.