பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை கூறினார்.
வில்லியனூர்,
புதுவை அரசின் கள விளம்பரத்துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கொம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய வானொலி நிலைய உதவி இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துணி பைகளை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கினார். பின்னர் என்.எஸ்.எஸ். மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடும் வீடும் சுத்தமாக இருக்க அடிப்படை விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகிறது. நமது வாழ்க்கை முறையால் காற்று, நீர் மாசடைந்துள்ளது. முன்பும் தற்போதைய வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உணவு முறையில் மாற்றம், உழைப்பில்லாத வாழ்க்கை இவையெல்லாம் சேர்ந்து நோய்களை அதிகரித்து விட்டன. இதற்கெல்லாம் நம்மிடம் இருந்துதான் மாற்றம் வரவேண்டும்.
மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றால் மட்டும் போதாது. தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களை சந்தித்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாணவர்களால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் சிவக்குமார், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ், நகர்நல அலுவலர் டாக்டர் கதிரேசன், பெண்கள் நுகர்வோர் அமைப்பு தலைவர் திலகவதி, செங்கழுநீரம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்தியமூர்த்தி, ஓவியர் லோகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தூய்மை இந்தியா திட்டம் குறித்த விவாத போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.