போடியில் ரேஷன் அரிசி, மண்எண்ணெய் பதுக்கல்; மூதாட்டி உள்பட 2 பேர் கைது

போடியில் ரேஷன் அரிசி, மண்எண்ணெயை பதுக்கி வைத்திருந்த மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-24 23:00 GMT
போடி, 

போடியில் ரேஷன் அரிசி, மண்எண்ணெயை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்த போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் போடி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இந்திராகாந்தி சிலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் 80 லிட்டர் மண்எண்ணெயை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போடியை சேர்ந்த ஆறுமுகத்தம்மாள் (வயது 62) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் ரேஷன் கடையில் இருந்து மண்எண்ணெயை வாங்கி அவர் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதேபோல் போடி திருமலாபுரத்தில் சவுந்திரபாண்டி (70) என்பவர் தனது வீட்டில் 30 லிட்டர் மண்ணெய், 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தம்மாள், சவுந்திரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்