அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

அமைச்சரின் உதவியாளர் எனவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி 2 வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-01-24 23:00 GMT
அடையாறு,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் பட்டுராஜா(வயது 23), இன்பகுமார்(27). இவர்களுக்கும், விருதுநகரை சேர்ந்த மாரிராஜ்(53) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

மாரிராஜ், “நான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் உதவியாளராக உள்ளேன். அமைச்சர் சிபாரிசு மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும்” என்றார்.

அவரின் ஆசைவார்த்தையில் மயங்கிய பட்டுராஜாவும், இன்பகுமாரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் வைத்து ரூ.10 லட்சத்தை பல தவணைகளாக மாரிராஜிடம் கொடுத்தனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட மாரிராஜ், அதன்பிறகு வாலிபர்களின் தொடர்பை துண்டித்தார். கூறியபடி வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர்கள் இருவரும், அமைச்சர் இல்லத்துக்கு சென்று அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்களிடம் மாரிராஜ் குறித்து விசாரித்தனர்.

அப்போதுதான் அவர் அமைச்சரின் உதவியாளர் போல் நடித்து தங்களிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் மாரிராஜை பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி மாரிராஜை தொடர்பு கொண்ட அவர்கள், “நாங்கள் கூடுதலாக பணம் தருகிறோம். எப்படியாவது வேலை வாங்கி கொடுங்கள். அமைச்சர் இல்லம் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலைக்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுங்கள்” என்றனர்.

அதன்நம்பி மாரிராஜ், தனது நண்பர் பெரியசாமி(32) என்பவருடன் கிரீன்வேஸ் சாலைக்கு வந்தார். அங்கு பட்டுராஜா, இன்பகுமார் தயாராக நின்றனர். ஏற்கனவே மாரிராஜின் மோசடியை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் விசாரித்தனர்.

இதனால் பயந்து போன பெரியசாமி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இதேபோல் தப்பி ஓட முயன்ற மாரிராஜை, 2 வாலிபர்களும் மடக்கிப்பிடித்து அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

வாலிபர்களிடம் இருந்து மாரிராஜ் பணத்தை பெற்றது நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகம் என்பதால் இந்த வழக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அபிராமபுரம் போலீசார் மாரிராஜை நுங்கம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து பட்டுராஜா, இன்பகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிராஜை கைது செய்தனர். மாரிராஜ் இதுபோல் வேறு எங்கும் மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்