திருக்கனூர் அருகே மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

திருக்கனூர் அருகே மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்து குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-01-24 23:00 GMT
திருக்கனூர், 

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் தனியார் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் மது குடிப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மதுக்கடையின் கேஷியர், வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசி விட்டு சென்றனர்.

அந்த வெடிகுண்டுகள் கடையின் ஷட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. கடையின் ஷட்டர் மட்டும் சேதமடைந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதுபான கடையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

மதுக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் வெடிகுண்டு வீசி சென்றவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் மூலம் வெடிகுண்டு வீசிய மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாமூல் தர மறுத்த ஆத்திரத்தில் அப்பகுதியை சேர்ந்த ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுக்கடை மீது வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கூனிச்சம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்