அளக்கரை திட்ட பணிகள் நிறைவு குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்க வெள்ளோட்டம்
அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து கோத்தகிரி குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்க வெள்ளோட்டம் நடந்து வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு கோடநாடு அருகே உள்ள ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக தற்போதைய குடிநீர் வினியோகம் போதுமானதாக இல்லை. மேலும் கோடை காலத்தில் ஈளாடா தடுப்பணை வறண்டு விடுவதால், குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஈளாடா தடுப்பணை தூர்வாரப்பட்டு, பக்கவாட்டு சுவர்கள் அமைத்து பலப்படுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த கொள்ளளவை விட இரட்டிப்பு மடங்கு கொள்ளளவு தண்ணீரை தடுப்பணையில் தேக்க முடிந்தது. இது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தின் வறட்சி நிவாரண நிதியின் கீழ் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் 5 ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையில் கோத்தகிரியில் அடிக்கடி நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து அளக்கரை பகுதியில் செல்லும் நீரோடையை தடுத்து, அந்த தண்ணீரை சேகரிக்க பிரமாண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. அதே இடத்தில நீர் உந்து நிலையமும் அமைக்கப்பட்டது.
பின்னர் சக்திமலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியது. இதற்காக அளக்கரையில் இருந்து சக்திமலை வரை தண்ணீரை கொண்டு செல்ல இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் 7 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகளும், நீர் உந்து நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டன.
சுத்திகரிப்பு நிலையத்தில் அளக்கரையில் இருந்து சக்திமலைக்கு கொண்டு வரப்படும் தண்ணீரை சேமித்து வைக்க 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி, தண்ணீரை சுத்திகரிக்க தலா 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேமித்து வைக்க 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் தொட்டிகளுக்குள் கூழாங்கற்கள், மணல் கொட்டும் பணி நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவு பெற்று விட்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ராம்சந்த் சதுக்கத்தில் உள்ள நீர்உந்து நிலைய தண்ணீர் தொட்டிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்ய வெள்ளோட்டம் நடந்து வருகிறது. தற்போது தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கோத்தகிரி பேரூராட்சி மூலம் குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தினமும் 8 லட்சம் லிட்டர் குடிநீரை வினியோகிக்க முடியும். இருப்பினும் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான பகிர்மான குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை களைந்து, கோடை காலத்துக்குள் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குனர் பீமராஜ் கூறும்போது, அளக்கரையில் இருந்து சக்திமலைக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படாத தண்ணீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகளை அடிக்கடி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்புகிறோம். இந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததா? என்று சோதிக்கப்படுகிறது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வினியோகம் செய்ய வெள்ளோட்ட பணி நடந்து வருகிறது. விரைவில் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
வீட்டு குழாய் இணைப்புகள்
கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:-
அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் 8 லட்சம் லிட்டர் குடிநீர் மற்றும் ஈளாடா தடுப்பணையில் இருந்து கிடைக்கும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் என மொத்தம் 10 லட்சம் லிட்டர் குடிநீர் கோத்தகிரி பகுதியில் உள்ள 8 வார்டுகளின் குடியிருப்புகளுக்கும் தடையின்றி வினியோகிக்கப்படும். இதற்கு தேவையான பகிர்மான குழாய்கள் மற்றும் குடிநீர் வினியோக தொட்டிகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய பேரூராட்சிகளின் இயக்குனரால் டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நகர்புற அடிப்படை கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் இருந்து நியமிக்கப்பட்டு உள்ள மதிப்பீட்டாளர் கோத்தகிரி பகுதிக்கு வந்து களப்பணி மூலம் ஆய்வு செய்து திட்ட அறிக்கையை அளிப்பார்.
அந்த அறிக்கையின்படி பகிர்மான குழாய்கள் அமைத்து, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். பொது குடிநீர் குழாய் இணைப்புகள் குறைக்கப்பட்டு, வீட்டு குழாய் இணைப்புகள் அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் முடிய சில மாதங்கள் தேவைப்படும். இருப்பினும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீரை ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான பகிர்மான குழாய்கள் மூலமாகவே குடியிருப்புகளுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் கோடை காலத்தில் கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.