தூத்துக்குடி-கோவில்பட்டி உள்பட 6 இடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் 1-ந் தேதி முதல் தொடங்குகிறது

தூத்துக்குடி, கோவில்பட்டி உள்பட 6 இடங்களில் வருகிற 1-ந் தேதி முதல் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2019-01-24 23:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தகுளம், அய்யனாரூத்து கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நோய் தாக்கிய பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்களுடன் வந்தனர். அவர்கள் பயிர்கள் சாம்பல்நோய், செந்தாழை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதே போன்று ம.தி.மு.க.வை சேர்ந்த மகராஜன் என்பவர் காதில் பூ தொடங்கவிட்டபடி வந்து பேசினார். அப்போது, தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனம் விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் அத்துமீறி மின்கம்பங்களை நட்டி வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டாலும், கீழ் நிலைஅதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர்கள் விவசாயிகளின் காதில் பூ சுற்றுகிறார்கள். இதனால்தான் நான் காதில் பூ அணிந்து வந்து உள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-

எட்டயபுரம் பகுதியில் பட்டா நிலத்தில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும். தற்போது 140 நாட்களில் விளையக்கூடிய நெல், 70 நாட்களிலேயே பொதி வைத்து உள்ளது. தரமற்ற விதையால் மகசூல் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கோவில்பட்டி பகுதியில் உள்ள ஓடையில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆவல்நத்தம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடருக்கான சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். தனியார் காற்றாலை நிறுவனம் பட்டா இடங்களில் அனுமதியின்றி மின்கம்பங்களை நட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாசரேத் அருகே உள்ள தென்கரை குளத்தில் 10 மதகுகள் உள்ளன. இதில் 5 மதகுகளில் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும். கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மக்களுக்கு சீராக வேலை வழங்க வேண்டும். புத்தன்தருவைகுளத்தை ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் முன்கூட்டியே திறக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-


தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, புதூர், கழுகுமலை, எட்டயபுரம், கடம்பூர் ஆகிய 6 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்து உள்ளது. இந்த விற்பனைக் கூடங்களில் வருகிற 1-ந் தேதி முதல் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடங்கப்படுகிறது. இங்கு ஒரு கிலோ உளுந்து ரூ.56-க்கும், ஒரு கிலோ பாசிப்பயறு 69 ரூபாய் 75 பைசாவுக்கும் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்த 3 நாட்களில் விவசாயினுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். ஆவல்நத்தத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் வழி புறம்போக்கு நிலமாக இருந்தால் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்.

தனியார் காற்றாலை நிறுவனம் ஓடைகளில் நட்டிய மின்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதுவரை 62 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அடுத்த மாதம்(பிப்ரவரி) முதல் வாரத்தில் காற்றாலை நிறுவனம், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புத்தன்தருவை குளத்தை ஆழப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள், சிம்ரான்ஜித் சிங் கலோன், விஜயா, கோவிந்தராசு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொர்ணகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்