சின்னசேலம் அருகே லாரிகள் அடுத்தடுத்து மோதல்; கூட்டுறவு சங்க செயலாளர் பலி

சின்னசேலம் அருகே லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் நடைபயிற்சிக்கு சென்ற கூட்டுறவு சங்க செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-01-24 22:45 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). இவர் சின்னசேலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். சுப்பிரமணியன் தினசரி காலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் சுப்பிரமணியன் நடைபயிற்சிக்கு சென்றார். சின்னசேலம் இந்திரா நகர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து பார்சல் ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற மினிலாரி மீது மோதியது.

இதில் லாரி மோதிய வேகத்தில் மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற சுப்பிரமணியன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுப்பிரமணியன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுப்பிரமணியனின் அண்ணன் மகன் செல்வராஜ், சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விபத்தை ஏற்படுத்திய பார்சல் லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் சித்தூர் ரல்லிகுப்பம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்